சத்தீஸ்கரில் ரூ.6,000 கோடி ஊழல்; காங்., முன்னாள் முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை போபால், கொல்கட்டா, டில்லி உட்பட 60 இடங்களில் அதிரடி
சத்தீஸ்கரில் ரூ.6,000 கோடி ஊழல்; காங்., முன்னாள் முதல்வர் வீட்டில் சி.பி.ஐ., சோதனை போபால், கொல்கட்டா, டில்லி உட்பட 60 இடங்களில் அதிரடி
ADDED : மார் 27, 2025 12:42 AM

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில், 2,000 கோடி ரூபாய் மதுபான ஊழலில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து, 6,000 கோடி ரூபாய் சட்ட விரோத, 'ஆன்லைன்' சூதாட்ட செயலி ஊழலில், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீடுகள் உட்பட, 60 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
முறைகேடு
இங்கு, 2019 - 2022 வரை முதல்வராக இருந்த காங்கிரசின் பூபேஷ் பாகேல் மீது, மதுபான முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதுபான ஊழலில் ஈடுபட்டதாக, பூபேஷ் பாகேல் வீடு, அலுவலகங்களில் கடந்த 10-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, பூபேஷ் ஆட்சிக் காலத்தில், சட்டவிரோத மஹாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி வாயிலாக, 6,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக, மாநிலம் முழுதும் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.
இந்த வழக்குகளை, தற்போதைய சத்தீஸ்கர் பா.ஜ., அரசு, சி.பி.ஐ., வசம் கடந்த ஆண்டு ஒப்படைத்தது.
இந்த விவகாரத்தில், பொருளாதார குற்றவியல் வழக்குகளும் இருந்ததால், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது.
இந்த, 6,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக பூபேஷ், அவரது நம்பிக்கைக்குரியவர்களான ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆனந்த், அபிஷேக் பல்லவா, ஆரிப் ஷேக், காங்.,- - எம்.எல்.ஏ., தேவேந்திர யாதவ் மற்றும் 14 பேர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
60 இடங்கள்
இந்நிலையில், பூபேஷ் பாகேல் வீடுகள் உட்பட 60 இடங்களில் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சத்தீஸ்கரின் ராய்ப்பூர், பிலாய் நகரங்களில் சோதனை நடந்தது.
துர்க் மாவட்டத்தின் பிலாயில் உள்ள காங்., - -எம்.எல்.ஏ., தேவேந்திர யாதவ் வீடு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆனந்த், அபிஷேக், ஆரிப் ஆகியோரின் வீடுகளிலும் சி.பி.ஐ., சோதனை நடந்தது.
இது தவிர, இந்த ஊழல் தொடர்பாக, ம.பி., தலைநகர் போபால், மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டா, டில்லி என வெளி மாநிலங்களிலும் சோதனை நடந்தது. மொத்தம் 60 இடங்களில் ஒரே நேரத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் களமிறங்கினர்.
சோதனை குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், 'சட்டவிரோத மஹாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் புரமோட்டர்களான ரவி உப்பல், சவுரப் சந்திரசேகர் ஆகியோர் தற்போது துபாயில் உள்ளனர். சட்ட விரோத ஆன்லைன் சூதாட்ட செயலியை தடையின்றி நடத்த, கணிசமான பணத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளனர்.
'தொடர்ந்து சி.பி.ஐ., நடத்திய சோதனைகளில், டிஜிட்டல் மற்றும் ஆவணங்கள் வடிவிலான ஆதாரங்கள் சிக்கின' என, கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை
டில்லியில் காங்., தலைமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பூபேஷ் பாகேல், நேற்று காலை புறப்பட்ட சமயத்தில், இந்த சோதனை துவங்கியதால் காங்., கண்டனம் தெரிவித்தது.
எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த சி.பி.ஐ., அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துவதாகவும், ஏழு ஆண்டுகளாக நீடித்த செக்ஸ் சி.டி., வழக்கில் இருந்து விடுதலையானது போலவே, இந்த வழக்குகளில் இருந்தும் பூபேஷ் விடுவிக்கப்படுவார் எனவும் காங்., நம்பிக்கை தெரிவித்துள்ளது.