ADDED : ஏப் 03, 2025 01:30 AM
பீதர்:நீதிபதி வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், ௭ லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றது.
பீதர் நகரின், ஜனவாடா சாலையில் வசிப்பவர் நீதிபதி சேஜ் சவுடாயி. இவர் பீதரின் இரண்டாவது கூடுதல் சிவில் மற்றும் இரண்டாவது ஜே.எம்.எப்.சி., நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு, தன் குடும்பத்துடன் சேஜ் சவுடாயி கொப்பாலுக்குச் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து, 7,61,800 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பியது.
ஊரில் இருந்து நேற்று மதியம் நீதிபதி குடும்பத்தினர், வீடு திரும்பியபோது திருட்டு நடந்தது தெரிய வந்தது. இந்த காட்சி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
நியூ டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். சுற்றுப்பகுதிகளில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

