அரிய ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி
அரிய ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி
ADDED : ஆக 07, 2025 12:30 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் அரிய வகை ரூபாய் நோட்டுகள் மற்றும் சிறப்பு நாணயங்களை வாங்குவதாகக் கூறிய மோசடிக்காரர்களிடம், 8.50 லட்சம் ரூபாயை பெண் ஒருவர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள மஸ்கான் பகுதியைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர், அரிய வகை நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர். 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் சமீபத்தில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.
இதில், 'அரிய வகை ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை அளித்தால், அதற்கு ஈடாக கூடுதல் தொகை அளிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அப்பெண், தன்னிடம், '786' என்ற வரிசை எண்ணில் முடியும் 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒற்றை கொம்பு காண்டாமிருகம் பொறிக்கப்பட்ட 25 காசுகள் தன்னிடம் இருப்பதாகவும், இது அரிதானவை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு எதிர்தரப்பில் பேசிய நபர், 'நீங்கள் தெரிவித்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு 6 லட்சம் ரூபாய் அளிக்க தயாராக உள்ளோம். அதற்கு முன் பதிவு கட்டணம், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட இதர கட்டணங்களை நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்' என குறிப்பிட்டார்.
இதை உண்மை என நம்பி, அவர்கள் தெரிவித்த பல வங்கி கணக்குகளுக்கு, 8.4 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை அப்பெண் அனுப்பினார். அதன்பின் விளம்பரம் அளித்த நபரை, அப்பெண் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
ஆனால், அந்த மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி செய்த நபர்கள் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.