ADDED : நவ 22, 2024 01:04 AM
அய்ஸ்வால், வடகிழக்கு மாநிலமான மிசோரமில், இரு வேறு இடங்களில் ஹெராயின் உள்ளிட்ட 86 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
மிசோரமில், இந்திய - மியான்மர் எல்லையில் உள்ள தியோ ஆற்றின் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அசாம் ரைபிள்ஸ் படையினர், மாநில போலீசாருடன் இணைந்து சம்பாய் மாவட்டத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதையறிந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அவர்கள் விட்டுச் சென்ற 28.52 கிலோ 'மெத் ஆம்பெட்டமைன்' என்ற பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட இந்த போதைப்பொருளின் மதிப்பு, 85.56 கோடி ரூபாய்.
இதேபோல், சம்பாய் மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், 52 கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஆண், பெண் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 39 லட்சம் ரூபாய் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நபர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.