ADDED : பிப் 22, 2024 01:42 AM
புதுடில்லி:காலாவதியான வாகனங்களை பொது இடங்களில் இயக்கினால், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்க டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது:
காலாவதியான வாகனங்களை பொது இடங்களில் இயக்கக் கூடாது. மீறி இயக்கப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தினமும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, காற்று தர மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் நடைமுறை இரண்டு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
காலாவதியான வாகனங்களின் பதிவை, தேசிய தலைநகர் மண்டலத்துக்கு வெளியே மாற்றிக் கொள்ள விரும்புவோர் மாற்றிக் கொள்ளலாம்.
தேசிய தலைநகர் பகுதிக்குள் இனி, காலாவதியான வாகனங்களை இயக்க மாட்டேன் என உறுதிமொழி அளித்து, வாகனங்களை மீட்டுக் கொள்ளலாம்.
அதேநேரத்தில், இரண்டாவது முறையாகவும் வாகனத்தை இயக்கும் போது பிடிபட்டால், அந்த வாகனங்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது.
பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான வாகனங்களை மீட்க, தேவையான ஆவணங்களுடன், வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று வாரங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணையதளம் விரைவில் உருவாக்கப்படும்.
பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் 'ஸ்கிராப்பிங்'குக்கு அனுப்பி, அடுத்த 15 நாட்களுக்குள் ஸ்கிராப் மதிப்புத் தொகை வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.