ADDED : பிப் 14, 2024 01:47 AM

பெங்களூரு, பெங்களூரில், தடை செய்யப்பட்ட குட்காவை, சட்ட விரோதமாக விற்பனை செய்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 1.45 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
நகரில் உள்ள சில ஹூக்கா பார்களில் நிகோடின் அம்சம் நிறைந்த குட்கா புகையிலை பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகாவில் இந்த குட்கா பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இவை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, சாம்ராஜ்பேட், ராமமூர்த்தி நகர், மஹாதேவபுரா போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு, தடை செய்யப்பட்ட குட்கா விற்பது தெரியவந்தது. கடைகளுக்கு வினியோகம் செய்தவர்கள், விற்பனை செய்தவர்கள் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களிடம் இருந்து, 1.45 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள், 11 மொபைல் போன்கள், 1.10 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி காசுகள், சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
