ADDED : அக் 08, 2024 06:23 AM

மங்களூரு : போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, நைஜீரியா நாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான, எம்.டி.எம்.ஏ., போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மங்களூரு, பம்ப்வெல்லில் எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள் விற்றதாக, கடந்த மாதம் 29ம் தேதி செம்புகுட்டாவின் ஹைதர் அலி, 51, என்பவரை கங்கனாடி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 75,000 ரூபாய் மதிப்பிலான 15 கிராம் எம்.டி.எம்.ஏ., போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கங்கனாடி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு பின், சி.சி.பி.,க்கு மாற்றப்பட்டது.
ஹைதர் அலியிடம், சி.சி.பி., அதிகாரிகள் விசாரித்தனர்.
பெங்களூரில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்த, பீட்டர் இக்கேடி பெலன்வு, 38, என்பவரிடம் இருந்து, போதைப் பொருள் வாங்கி விற்றதாக கூறினார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், நேற்று முன்தினம் பெங்களூரு சென்ற, மங்களூரு சி.சி.பி., போலீசார், பீட்டர் இக்கேடி பெலன்வு வசித்து வந்த, டொம்மசந்திரா வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது கூரியர் கவர்களில் இருந்த 6 கிலோ 310 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ., சிக்கியது. இதன் மதிப்பு 6 கோடியே 63 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும்.
மூன்று மொபைல் போன்கள், எடை இயந்திரம், 35 ஏ.டி.எம்., கார்டுகள், 17 சிம் கார்டுகள், பத்து வங்கிக்கணக்கு புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பீட்டர் இக்கேடி பெலன்வும் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் விற்ற வழக்கில், கடந்த ஆண்டு அவர் மீது பெங்களூரு வித்யாரண்யபுரா போலீசாரும், வழக்குப்பதிவு செய்தது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடக்கிறது.