ADDED : செப் 19, 2024 12:54 AM
அய்ஸ்வால்,
மியான்மரில் இருந்து மிசோரமுக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 6 கோடி ரூபாய் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மிசோரத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான மியான்மரில் இருந்து வடகிழக்கு மாநிலமான மிசோரத்துக்கு இருவேறு வாகனங்களில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சி.ஐ.டி., போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தலைநகர் அய்ஸ்வாலின் புறநகர் பகுதியான ஹலங்கோமன் பகுதியில் கடந்த 16ல் வந்த இரு கார்களை போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது கார்களின் கதவுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஒரு காரில் இருந்து 32 கிலோ எடையுள்ள மெத்தம்பாட்டமைன் மாத்திரைகள் மற்றும் 249 கிராம் ஹெராயின் என மொத்தம் 4.2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு காரில் 8 கிலோ மெத்தம்பாட்டமைன் மாத்திரைகளும், 565 கிராம் ஹெராயின் என 1.2 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மியான்மரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஹலங்கோமன் பகுதியில் நடந்த வாகன சோதனையில் தப்பிச் சென்ற வாகனத்தை நேற்று முன்தினம் போலீசார் ஜூவாங்குடி பகுதியில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது டிரைவர், காரை நிறுத்தி விட்டு தப்பியோடினார். தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில், அந்த காரில் இருந்து 2.2 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு 68.5 லட்சம் ரூபாய். காரில் பயணித்த மிசோரம் சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைதான மூவரும் சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.