ஆர்.எஸ்.எஸ்., செயல்திட்டத்தை திணிக்கும் செயல்: ராகுல் பேச்சு
ஆர்.எஸ்.எஸ்., செயல்திட்டத்தை திணிக்கும் செயல்: ராகுல் பேச்சு
ADDED : பிப் 06, 2025 09:53 PM

புதுடில்லி,:''பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்களை நியமிப்பதற்கான யு.ஜி.சி.,யின் வரைவு விதிமுறைகள், 'ஒரே வரலாறு, ஒரே மரபு, ஒரே மொழி' என்ற ஆர்.எஸ்.எஸ்., செயல்திட்டத்தை திணிக்கும் முயற்சி,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்களை நியமிப்பதற்கான விதிமுறைகளை மாற்றி, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழுவின் புதிய வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சி எனக்கூறி தமிழகம் உட்பட பா.ஜ., ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தி.மு.க., சார்பில் டில்லியில் நேற்று நடந்த போராட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றார்.
போராட்டத்தில் ராகுல் பேசியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான மரபு, வரலாறு, மொழி உள்ளன. எனவே தான், நம் நாட்டை மாநிலங்களின் ஒன்றியம் என அரசியலமைப்பு அழைக்கிறது. அனைத்து மொழிகள், கலாசாரங்கள், மரபுகள், வரலாறுகளை நாம் மதிக்க வேண்டும். அதன் ஆணிவேரை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக மக்களுக்கென்று தனித்துவமான வரலாறு, மொழி, மரபு உள்ளன. அப்படியிருக்கும் போது மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழகம் மற்றும் இன்றி பிற மாநில மக்களையும் இழிவுபடுத்துகிறது.
பிற மாநிலங்களின் வரலாறு, கலாசாரம், மரபுகளை அழித்துவிட்டு, 'ஒரே வரலாறு, ஒரே மரபு, ஒரே மொழி' ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.,சின் நோக்கம்.
அதை நிறைவேற்றவே யு.ஜி.சி., விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி உள்ளது. இது ஆர்.எஸ்.எஸ்., செயல்திட்டத்தை திணிக்கும் முயற்சி.
இவ்வாறு அவர் பேசினார்.

