3 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் வேண்டுகோள்
3 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் வேண்டுகோள்
ADDED : ஆக 29, 2025 12:49 AM

புதுடில்லி: ''குடும்ப நல்லிணக்கம் மற்றும் நாட்டின் மக்கள் தொகை சமநிலையை பேண ஒவ்வொரு குடும்பமும் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டார்.
தலைநகர் டில்லியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதன்பின் செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது.
மக்கள் தொகையில் சமநிலையை பேண ஒவ்வொரு குடும்பமும் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் இருக்கக்கூடாது. இதை அனைவரும் ஏற்க வேண்டும்.
கல்விக்கொள்கை மூன்று குழந்தைகள் உள்ள வீட்டில், அவர்களுக்கிடையே 'ஈகோ' இருப்பதில்லை. கல்வி மிகவும் முக்கியமானது. கல்வி என்பது வெறும் தகவல்களைச் சேகரித்து வைப்பது மட்டுமல்ல; ஒருவரை மனிதனாக மாற்ற வேண்டும். அத்தகைய கல்வி முறையே எதிர்பார்க்கிறோம்.
நாம் அடிமைகளாக இருந்த போது, நம் பழைய கல்வி முறை மறைந்து, புதிய கல்வி முறை வந்தது. அதை அவர்களுக்கு ஏற்ப உருவாக்கினர். தற்போது நாம் சுதந்திரமாக இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை இவற்றை எல்லாம் உள்ளடக்கி இருக்கிறது.
இந்திய பிரிவினையை ஆர்.எஸ்.எஸ்., எதிர்க்கவில்லை எனக் கூறுவது தவறு. நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அப்போது, ஆர்.எஸ்.எஸ்., போதுமான வலிமையுடன் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள். அனைவரும் சமம் என்றால், ஏன் ஹிந்து -- முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேச வேண்டும்?
சாலைகள், இடங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்கள் சூட்டக்கூடாது. நான் முஸ்லிம்களின் பெயர்களை சூட்டக்கூடாது என, சொல்லவில்லை.
மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது. நாம் அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
விதிமுறைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன, வரையறுக்கப்பட்ட வளங்கள் உள்ளன.
நம் நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது முக்கியம். எனவே, ஊடுருவல் நிறுத்தப்பட வேண்டும். இதைத் தடுக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.