நாக்பூரில் இன்று துவங்குகிறது ஆர்.எஸ்.எஸ்., முக்கிய கூட்டம்
நாக்பூரில் இன்று துவங்குகிறது ஆர்.எஸ்.எஸ்., முக்கிய கூட்டம்
ADDED : மார் 15, 2024 12:39 AM

ஏப்., - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அகில இந்திய பிரதிநிதி சபா குழுவின் கூட்டம் இன்று முதல், மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பொதுச்செயலர் சுனில் பன்சால், அமைப்பு செயலர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதில், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை 370 தொகுதிகளில் வெற்றி பெற வைப்பது; யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டத்தை நாடு முழுதும் அமல்படுத்துவது, விவசாயிகள் போராட்டம், மணிப்பூர் மற்றும் சந்தேஷ்காலி கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை கட்டிய பா.ஜ., அரசை பாராட்டி தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்கு முன், இந்த குழுவின் கூட்டம், 2018ல் நடந்தது குறிப்பிடத் தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -

