ஆக.31 முதல் செப்., 02 வரை ஆர்எஸ்எஸ் பிரசாரகர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ஆக.31 முதல் செப்., 02 வரை ஆர்எஸ்எஸ் பிரசாரகர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : ஆக 20, 2024 05:40 PM

புனே : ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய பிரசாரகர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாலக்காட்டில் வரும் ஆக.,31 முதல் செப்., 2 வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைபின் அகில பாரதிய பிரசார பிரமுகர் சுனில் அம்பேத்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அகில இந்திய பிரசாரகர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். கடந்தாண்டு செப்., மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்தது. சங்கத்தின் பல்வேறு அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள், அழைப்பின் பேரில் பங்கேற்பது வழக்கம். இந்த அமைப்புகள் அனைத்தும், சமூக மாற்றத்திற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் சமூக வாழ்வின் பல்வேறு துறைகளில் ஜனநாயக வழிமுறைகளுடன் செயல்படுகின்றன.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும், தங்களின் குறித்த அனுபவம் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். தற்போதைய சூழ்நிலையில் தேசிய நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள், சமீபத்திய முக்கிய நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். பல்வேறு விஷயங்களில் பரஸ்பர ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படும்.
இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் தத்தேத்ரயா ஹோசபலே மற்றும் கூடுதல் பொதுச்செயலாளர்கள் 6 பேர் பங்கேற்க உள்ளனர். ராஷ்ட்ர சேவிக சமீதி, வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், பாரதிய ஜனதா கட்சி, பாரதிய விவசாய சங்கம், வித்ய பாரதி, பாரதிய மஜ்தூர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 32 நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.