தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் போட்டி போராட்டம்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் போட்டி போராட்டம்

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பார்லி., வளாகத்தில் போட்டி போராட்டம்


UPDATED : ஆக 11, 2026 10:15 PM

ADDED : ஆக 11, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 10:15 PM ADDED : ஆக 11, 2026 07:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

பார்லிமென்டின் பிரதான நுழைவாயிலான மகத் துவார் பகுதியில், ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களும், எதிர்க்கட்சியான, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்களும் போட்டி போட்டு நேற்று போராட்டம் நடத்தினர். ஜார்க்கண்டில் மாணவர்கள் மீதான தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, இரு தரப்பும் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த, 20ல் தொடங்கியது; நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை குறிப்பிடும்படி எந்த அலுவல்களும் நடக்கவில்லை. டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தடியடி, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, பார்லி.,யை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

இந்நிலையில், வழக்கம் போல லோக்சபா நேற்று கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், ''சபையை நடத்த ஒத்துழைப்பு தரும்படி பல முறை எதிர்க்கட்சியினரிடம் கேட்டு விட்டேன். எனினும் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க வேண்டி உள்ளது. எனவே, சபையை நடத்த வழிவிடுங்கள். சபையில் தொடர்ந்து நடக்கும் இடையூறு, ஜனநாயகத்தின் மாண்புக்கு எதிரானது. பதாகைகளை ஏந்துவதை நிறுத்திவிட்டு, சபையில் விவாதங்களை நடத்துங்கள். பார்லி., செயல்படாதபோது என் மனம் வேதனைப்படுகிறது,'' என்றார்.

எதிர்க்கட்சிகளின் அமளி தொடரவே, தொடங்கிய நான்கு நிமிடங்களிலேயே, பிற்பகல் 2:00 மணி வரை லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் இதே நிலை தான் நீடித்தது. அடுத்தடுத்த ஒத்தி வைப்புக்கு பின், பிற்பகல் 2:00 மணிக்கு சபை கூடியதும், சபைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன், கேள்வி நேரத்தை எடுத்துக் கொண்டார்.

அப்போது, காங்., தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு பற்றி பேச முயன்றார். குறுக்கிட்ட துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ''இது ஒரு மாநில அரசு சார்ந்த விஷயம் என்பதால், சபையில் பேச அனுமதிக்க முடியாது,'' என்றார்.

கார்கேவுக்கு பதிலடி கொடுக்க, காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்டில், தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீதான தடியடி விவகாரத்தை, ஆளும் பா.ஜ., - எம்.பி.,க்கள் எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

முன்னதாக, பார்லி.,யின் பிரதான நுழைவாயிலான மகத் துவார் பகுதியில், ஆளும் தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களும், எதிர்க்கட்சியான, 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்களும் போட்டி போட்டு போராட்டம் நடத்தினர். 'மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பதிலளிக்க வேண்டும்; ராமர் கோவில் நன்கொடை முறைகேடு பற்றி விவாதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, இண்டி கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனருகே, போராட்டத்தில் ஈடுபட்ட தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள், 'ஜார்க்கண்டில் மாணவர்கள் மீதான தடியடி பற்றி ராகுல் வாய் திறக்காதது ஏன்? விவாதத்தில் இருந்து அவர் ஓடி ஒளிவது ஏன்?' என, கேள்வி எழுப்பினர். இரு தரப்பும் மோதிக் கொள்ளாமல் இருக்க, அவர்களுக்கு இடையே ஏராளமான பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இரு தரப்பும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால், பார்லி., வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

கேரள பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

ஒத்தி வைப்புக்கு பின், பிற்பகல் 2:00 மணிக்கு லோக்சபா கூடியதும், எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே, கேரளா பெயர் மாற்ற மசோதா விவாதமுமின்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது, கேரளாவின் பெயரை, 'கேரளம்' என மாற்ற வழிவகுக்கிறது. இதே போல், தேசிய கூட்டுறவு வளர்ச்சி கார்ப்பரேஷன் திருத்த மசோதாவும் விவாதமின்றி நிறைவேறியது. லோக்சபாவில் இதுவரை நிறைவேறிய, 11 மசோதாக்களில், வெறும் இரண்டில் மட்டுமே விவாதம் நடத்தப்பட்டுள்ளது.



தீர்ப்பாய சீர்திருத்த மசோதா

ராஜ்யசபாவில் நிறைவேற்றம் ராஜ்யசபாவில் , பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால், தீர்ப்பாய சீர்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, குரல் ஓட்டெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடு முழுதும் பல்வேறு தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, தேசிய தீர்ப்பாய ஆணையத்தை அமைக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமை தாங்குவார். இந்த மசோதா லோக்சபாவில் நேற்று முன்தினம் நிறைவேறியது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us