ராகுலை விமர்சித்த ரஷ்ய செஸ் வீரர்: ‛ஜோக்' என விளக்கம்
ராகுலை விமர்சித்த ரஷ்ய செஸ் வீரர்: ‛ஜோக்' என விளக்கம்
ADDED : மே 04, 2024 01:10 PM

மாஸ்கோ: ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் கேரி காஸ்பரோவ், ‛‛ தலைமைக்கு சவால் விடுவதற்கு முன்பு ராகுல் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும் '' எனக்கூறி இருந்தார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், அரசியல் பிரசாரத்திற்கு இடையே செஸ் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. மேலும், தனக்கு பிடித்த செஸ் வீரர் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஒருவர், ‛எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛ நல்லவேளை, கேரி காஸ்பரோவ் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் விரைவில் ஓய்வு பெற்று விட்டனர். இல்லையென்றால், அவர்கள் இக்காலத்தில் மிகப்பெரிய செஸ் மேதையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்'' என பதிவிட்டு இருந்தார். அதனுடன் கேரி காஸ்பரோவ்வையும் மேற்கோள் காட்டி இருந்தார்.
இதனால், இந்த பதிவு காஸ்பரோவின் கவனத்திற்கு சென்றது. அவர் அதற்கு அளித்த பதிலில், ‛‛ தலைமைக்கு சவால் விடுவதற்கு முன்பு ராகுல் ரேபரேலியில் வெற்றி பெற வேண்டும் '' எனக்கூறியிருந்தார். இதனையடுத்து இந்த பதிவு வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கேரி காஸ்பரோவ் அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: எனது சிறிய ஜோக் இந்திய அரசியலில் தாக்கம் அல்லது நிபுணத்துவம் பெறாது என நான் நம்புகிறேன். எனக்கு பிடித்த விளையாட்டில் ஒர் அரசியல்வாதி ஈடுபடுவதை என்னால் பார்க்காமல் இருக்க முடியாது '' எனக்கூறியுள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.