இந்தியாவில் தயாரிக்கப்படும் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் விமானம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியாவில் தயாரிக்கப்படும் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் விமானம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ADDED : அக் 28, 2025 04:08 PM

புதுடில்லி: இந்தியாவில் ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் SJ-100 விமானங்களை தயாரிப்பதற்காக, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ரஷ்யாவின் நிறுவனமான யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
சுகோய் சூப்பர் ஜெட் SJ 100 என்பது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஒரு இரட்டை இன்ஜின் கொண்ட குறுகிய தூர பயணிகள் விமானம். இது முன்னர் 'சுகோய் சூப்பர்ஜெட் 100' (SSJ100) என அழைக்கப்பட்டது. இந்த ஜெட் விமானங்களில் 200க்கும் மேற்பட்டவை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு உலகளவில் 16க்கும் மேற்பட்ட வணிக விமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.
இந்த விமானம் 103 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. தோராயமாக 3,530 கி.மீ. பறக்கும். இந்நிலையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம்,ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் ரஷ்யாவின் யுனைடெட் ஏர் கிராப்ட் நிறுவனமும் இணைந்து SJ 100 பயணிகள் விமானங்களை தயாரிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த பயணிகள் விமானம் உள்நாட்டு பயணத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது.1988ம் ஆண்டு முடிவடைந்த Avro HS-748 திட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முழுமையான பயணிகள் விமானம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால், SJ-100 திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வரும் டிசம்பரில் இந்திய-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு வருகை தருவதற்கு முன்னதாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் நீடித்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா இந்தியாவிற்கு அதிக வரி விதித்த போதிலும், இந்தியா ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புகிறது என்பதை இந்த புதிய ஒப்பந்தம் எடுத்துரைக்கிறது என சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

