குமுளி - சத்திரம் - புல் மேடு பாதையில் செல்ல சபரிமலை பக்தர்களுக்கு தடை
குமுளி - சத்திரம் - புல் மேடு பாதையில் செல்ல சபரிமலை பக்தர்களுக்கு தடை
ADDED : டிச 03, 2024 02:36 AM
சபரிமலை : தொடர்ந்து பெய்யும் மழையால் பாதுகாப்பு கருதி குமுளியிலிருந்து சத்திரம் வழியான பாதையில் பக்தர்கள் சபரிமலை செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.
சபரிமலை அமைந்துள்ள பத்தணந்திட்டை, இடுக்கி மாவட்டங்களில் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சபரிமலையில் நவ., 30 இரவு பெய்யத்தொடங்கிய மழை நேற்று மாலை வரை நீடித்தது. சீராக பெய்து வரும் மழை அடிக்கடி வலுக்கிறது. பக்தர்கள் பம்பையில் இருந்து சிரமங்களுக்கிடையில் மலையேறி தரிசனம் நடத்தி செல்கின்றனர்.
மழையால் குமுளியில் இருந்து முக்குழி, சத்திரம், புல் மேடு பாதைகளில் பக்தர்கள் செல்ல நேற்று இடுக்கி மாவட்ட கலெக்டர் புவனேஸ்வரி தற்காலிகமாக தடை செய்தார்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த தற்காலிக தடை அமலில் இருக்கும் என்றும் மழை குறைந்து நிலைமை சீரானதும் மீண்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இங்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலை சற்று தாமதித்து புல் மேடு பாதையில் வந்த 12 பேர் அடங்கிய பக்தர் குழுவினர் கழுதைப்புலி என்ற இடத்தில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் போலீஸ் மற்றும் வனத்துறை கட்டுப்பாடு மையத்துக்கு தெரிவித்தனர். சன்னிதானத்தில் இருந்து வனத்துறை மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண படையினர் அப்பகுதிக்குச் சென்று அனைவரையும் மீட்டு சன்னிதானம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
சபரிமலையில் மழை தொடர்ந்ததால் நேற்று காலை பம்பையிலும் பக்தர்கள் குளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பக்தர்களை இறங்க அனுமதித்தனர். தொடர்ந்து மழை அதிகரித்ததால் குளிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.