சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை விசாரணை
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை விசாரணை
ADDED : பிப் 17, 2026 05:54 PM

கொச்சி: சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தங்கம் திருடப்ப்டட விவகாரம் தொடர்பாக, நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
சபரிமலையில் ஐய்யப்பன் கோவிலின் துவாரக பாலகர் சிலைகளின் தங்கக்கவசத்தில் இருந்து 4.54 கிலோ தங்கம் திருடப்பட்ட விவகாரம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கக்கவசம் தங்க முலாம் பூசுவதற்கு சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, நடிகரின் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தியதுடன் அவரிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜெயராமுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். தங்கம் திருட்டு விவகாரத்தில் கைதான உன்னிகிருஷ்ணன் உடன் உள்ள தொடர்பு மற்றும் தங்கக்கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகும்படி ஜெயராமுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் இன்று ஜெயராம் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதற்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நம்பிக்கை மற்றும் எனது கடமையை நிறைவேற்ற அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி உள்ளேன். மலையாளிகளை பொறுத்தவரை சபரிமலை முக்கியமானதாக விளங்குகிறது. அங்கு ஏதேனும் முறைகேடு நடந்து இருந்தால், அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு அனைவரும் கடமைப்பட்டு உள்ளனர்.அதில் நானும் ஒருவன். இவ்வாறு அவர் கூறினார்.

