சபரிமலை மகர விளக்கு உற்ஸவம்: இடுக்கி கலெக்டர் ஆலோசனை
சபரிமலை மகர விளக்கு உற்ஸவம்: இடுக்கி கலெக்டர் ஆலோசனை
ADDED : செப் 29, 2024 11:25 PM

மூணாறு : சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மகர விளக்கு உற்ஸவம் நெருங்குவதால் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் இடுக்கியில் கலெக்டர் விக்னேஸ்வரி தலைமையில் நடந்தது.
பீர்மேடு எம்.எல்.ஏ., வாழூர்சோமன், சப் கலெக்டர் அனுப்கார்க் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
சபரிமலை மகர விளக்கு உற்ஸவ காலத்தில் நோடல் அதிகாரி, உதவி, நிர்வாக மாஜிஸ்திரேட்டுகள் நியமிக்கப்படுவர்.
இடுக்கி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போலீஸ் எஸ்.பி., தலைமையில் தேவையான அளவில் போலீசார் நியமிக்கப்படுவர்.
மகர விளக்கு நாளில் குமுளி, கோழிக்கானம் இடையே கேரள அரசு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். பொதுப்பணித்துறையினர் பக்தர்கள் செல்லும் ரோடுகளில் பராமரிப்பு பணிகள் செய்து முன் அறிவிப்பு போர்டுகள் வைக்க அறிவுறுத்தப்படும். குமுளி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
தமிழகத்தில் இருந்து வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாக வந்து குமுளி வழியாக திரும்ப வேண்டும். அதற்கு தேனி கலெக்டருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களுக்கு தரமான உணவு கிடைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிக்கப்படும்.
புல்மேடு வழியாக காட்டு வழியில் செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் வனத்துறை சார்பில் செய்யப்படும்.
பக்தர்கள் கடந்து செல்லும் பகுதிகளில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள், உப்புதரா, சத்திரம், பருந்துபாறை, பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்படும். அதே போல் ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட மருத்துவ வசதிகளும் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.