ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு தந்திரி பொறுப்பேற்பு
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு தந்திரி பொறுப்பேற்பு
ADDED : ஆக 17, 2025 02:04 AM

சபரிமலை:ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு காலத்துக்கான தந்திரியாக மகேஷ் மோகனரரு பொறுப்பேற்றார்.
நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்பட்டது.
இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகத்தை தொடர்ந்து நெய்யபிஷேகம் தொடங்கும். பின்னர் கணபதி ஹோமம், உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கும்.
21- ம் தேதி வரை எல்லா நாட்களிலும் காலை 11:00 மணி வரை நெய்யபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். 21 இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்படும். இன்று முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக மகேஷ் மோகனரரு நேற்று பொறுப்பேற்றார். தாழமன் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு ராஜீவரரு மற்றும் மகேஷ் மோகனரரு சுழற்சி முறையில் சபரிமலையில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கின்றனர்.
ஆவணி ஒன்றாம் தேதி கேரளாவில் வருடப்பிறப்பாக உள்ளதால் இன்று காலையில் ஐயப்பனை வழிபட நேற்று மாலையே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.