ADDED : ஜூலை 14, 2011 12:12 AM

சபரிமலை : மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை மறுநாள் (16ம்தேதி) மாலை திறக்கப்படும்.
பூஜைகள் முடிந்து, வரும் 21ம்தேதி நடை அடைக்கப்படும். கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு மாதமும், மாத பூஜைகள், சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் ஆகியவற்றுக்காக திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆடி மாத பூஜைகளுக்காக, நாளை மறுநாள் (16ம்தேதி) நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். அன்றைய தினம், வேறு பூஜைகள் இருக்காது. மறுநாள்(17ம்தேதி) அதிகாலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும்.
ஆடி முதல் தேதி (17ம்தேதி) முதல் ஐந்து நாட்கள், தொடர்ந்து மாத பூஜைகள் தவிர, சிறப்பு பூஜைகளான படி, உதயாஸ்தமன பூஜைகளும், நெய் அபிஷேகமும் நடைபெறும். வழக்கமான பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.
நிறப்புத்தரி உற்சவம்: ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த, புதிய நெற்கதிர்களை அய்யப்பனுக்கு கொண்டு வந்து படைப்பது வழக்கம். இதற்கு, நிறப்புத்தரி உற்சவம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், இவ்வாண்டுக்கான உற்சவம், வரும் ஆக., 5ம்தேதி (ஆடி மாதம் 20ம்தேதி) அதிகாலை 5.30 மணி முதல் 6.45 மணிக்குள் நடைபெற உள்ளது. உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஆக., 4ம்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். உற்சவம், சிறப்பு பூஜைகள் முடிந்து, அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

