ADDED : பிப் 22, 2024 06:46 AM

சாகசத்திலும், டிரெக்கிங்கிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு, கர்நாடகா - கோவா இடையே உள்ள சதா நீர்வீழ்ச்சி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கர்நாடகா - கோவா இடையே பெலகாவி மாவட்டத்தில் சதா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இருந்து நடந்து தான் செல்ல முடியும்.
மழைக்காலத்தில், நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமானால், மலையில் உள்ள நீரோடைகள், பாறைகளை தாண்டி செல்வது மிகவும் கடினமானது. இரு பெரிய மலைகளுக்கு இடையே 200 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் கொட்டும்.
நீர்வீழ்ச்சியை காண டிரெக்கிங் செல்லும் வழியில் பல குகைகளை காண நேரும். இந்நேரத்தில் பறவைகள், வன விலங்குகளையும் பார்க்கலாம்.
டிரெக்கிங் செல்லும்போது தேவையான உணவு, தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். கைகளை முழுதும் மறைத்த ஆடைகளை அணிந்து செல்வது நல்லது. வழிகாட்டி இல்லாமல் டிரெக்கிங் செல்வது நல்லதல்ல. அத்துடன் இங்கு முகாம் அமைத்து தங்க நினைப்பது பாதுகாப்பானது அல்ல; அனுமதியும் இல்லை.
எப்படி செல்வது?
பெங்களூரில் 550 கி.மீ., தொலைவிலும், பெலகாவியில் இருந்து 60 கி.மீ., தொலைவிலும் சதா நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. பெங்களூரில் இருந்து விமானம் மூலம் பெலகாவிக்கு செல்லலாம். ரயிலில் கூட செல்லலாம்.
பெலகாவியில் இருந்து சதா நீர்வீழ்ச்சிக்கு டாக்சிகள் செல்கின்றன. பல டிராவல் ஏஜன்சிகள், வழிகாட்டிகளுடன் அனுப்பி வைக்கின்றனர். சதாவை சுற்றிலும் ஹோம் ஸ்டேக்கள், ஹோட்டல்கள் உள்ளன
- நமது நிருபர் -.
22_Article_0001, 22_Article_0002
மனதை கவரும் சதா நீர்வீழ்ச்சி. (அடுத்த படம்) பாறைகள் நிறைந்த நீரோடை. இடம்: பெலகாவி.