பலன் தந்தது பாதுகாப்பு மண்டல திட்டம்: இந்தாண்டு விபத்துக்கள் குறைந்தது
பலன் தந்தது பாதுகாப்பு மண்டல திட்டம்: இந்தாண்டு விபத்துக்கள் குறைந்தது
ADDED : டிச 09, 2024 04:50 AM

சபரிமலை: சபரிமலை பக்தர்களுக்காக கேரள அரசு ஏற்படுத்திய பாதுகாப்பு மண்டல திட்டம் நல்ல பலனை தந்துள்ளதாக புள்ளி விபரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
24 பறக்கும் படைகள்
கேரள அரசும், போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த பாதுகாப்பு மண்டல திட்டத்தின் கீழ் இலவங்கல்,குட்டிக் கானம், எருமேலி ஆகிய இடங்களில் 24 பறக்கும் படைகள் இரவு பகலாக பணியில் உள்ளன. நடப்பு சீசன் தொடங்கிய பின்னர் 40 லட்சம் சிறு மற்றும் பெரிய வாகனங்கள் சபரிமலை பாதைகளில் கடந்து சென்றுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வரும் டிரைவர்களுக்கு இங்குள்ள ரோட்டின் தன்மை குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. துாக்கம் வராமல் இருக்க ஆங்காங்கே டீ வழங்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டால் அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பகுதிக்கு பறக்கும் படையினர் செல்வதோடு உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். வாகனங்கள் பழுதுஏற்பட்டால் சரி செய்வதற்கான ஒர்க் ஷாப்புகளும் உள்ளன. 35 வாகன உற்பத்தி நிறுவனங்களின் 90 மெக்கானிக்கல் டீம் இந்த பாதைகளில் தயாராக உள்ளது.
குறைந்தது
கடந்த 21 நாட்களில் 400 கி.மீ. சுற்றளவில் இலவங்கல்லில் 23, எருமேலியில் 10, குட்டிக்கானத்தில் 5 என 38 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. 20 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே கால அளவில் 60 விபத்துக்கள் நடைபெற்றது. இரண்டு பேர் இறந்தனர். கடந்தாண்டு எருமேலி, குட்டிகானத்தில் தான் அதிக விபத்துக்கள் நடைபெற்றது.
ரோந்து பணியை அதிகரித்ததும் சாதகமான காலங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ரோடுகளும் இந்த ஆண்டு விபத்துக்களை குறைக்க காரணமாக அமைந்துள்ளது என்று இடுக்கி என்போர்ஸ்மென்ட் ஆர்.டி. ஓ.கே.கே. ராஜீவ் கூறினார்.