ADDED : மார் 18, 2024 05:42 AM

சீனிவாசப்பூர், : தேர்தல் விதிமுறைகள் அமலானதால், சீனிவாசப்பூரில் இருந்த கடவுள் ராமர் படங்கள் இருந்த பிளக்ஸ் பேனர்கள், வீடுகளின் முன் கட்டப்பட்டிருந்த காவி கொடிகளை அகற்றிய ஊழியர்கள், அதை மயானத்தில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், நாடு முழுதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கோலார் மாவட்டம், சீனிவாசப்பூரின் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள், அட்டகல் கிராமத்தில் வீடு தோறும் இருந்த காவி நிற கொடி, ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ராமர் படம் உள்ள பிளக்ஸ் பேனர்களை ஊழியர்கள் அகற்றினர்.
அகற்றப்பட்ட காவி கொடிகள், ராமர் படம் உள்ள பிளக்ஸ் பேனர்களை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு எடுத்து செல்லாமல், கிராமத்தில் உள்ள மயானத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதை பார்த்த கிராமத்தினர், கிராம பஞ்சாயத்து ஊழியர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பஞ்சாயத்து பி.டி.ஓ., எஜாஸ் பாஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அரசியல் கட்சிகளின் கொடியை அகற்றாமல், காவி கொடியை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர். கொடி, பிளக்ஸ் பேனர்களை, பஞ்சாயத்து அலுவலகத்துக்கு எடுத்து செல்லும்படி பஞ்சாயத்து ஊழியர்களுக்கு, போலீசார் உத்தரவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மயானத்தில் வீசப்பட்டிருந்த காவி கொடிகள், ராமர் படம் உள்ள பிளக்ஸ் பேனர்கள். இடம்: அட்டக்கல் கிராமம், சீனிவாசப்பூர்.

