ADDED : பிப் 03, 2024 11:07 PM

ஹாசன்: ''காவி நிறம் தியாகம், வீரத்தின் சின்னம். இதை அணிவதற்கு குமாரசாமி வெட்கப்படக்கூடாது,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்தார்.
மாண்டியாவில் கெரேகோடு கிராமத்தில் ஹனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி இறக்கப்பட்டதைக் கண்டித்து பா.ஜ., - ம.ஜ.த.,வினர் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற குமாரசாமி, காவித் துண்டை, தனது தோளில் போட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் விமர்சித்ததுடன், ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடாவும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹாசனில் நேற்று பா.ஜ., முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி அளித்த பேட்டி:
அவரது கட்சி குறித்து கருத்துத் தெரிவிக்க மாட்டோம். குங்குமப்பூ என்பது நம் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம். ஒரு நிறம் மட்டுமல்ல, 1000 ஆண்டு பாரம்பரியம் உள்ளது. காவி என்றால் தியாகம், வீரம், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை.
குரு கோவிந்த் சிங், சத்ரபதி சிவாஜி மஹராஜ் ஆகியோர் காவிக் கொடியை பயன்படுத்தினர். மஹாபாரதத்தில் அர்ஜுனனின் கொடியின் நிறமாகவும் பகவான் இருந்தார்.
முனிவர்கள் இதை தியாகத்தின் அடையாளமாக பயன்படுத்தினாலும், சத்ரியர்கள் அதை வீரத்தின் அடையாளமாக பயன்படுத்தினர். அதை பயன்படுத்துவதில் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் பெருமைப்படுகிறோம். குமாசாமியும் வெட்கப்பட வேண்டியதில்லை. காவி துண்டு அணிவதால், நமக்கு தீமையில்லாமல் நன்மையே வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.