தேவகவுடாவுக்கு காவி துண்டு பா.ஜ., - எம்.எல்.ஏ., பேட்டி
தேவகவுடாவுக்கு காவி துண்டு பா.ஜ., - எம்.எல்.ஏ., பேட்டி
ADDED : பிப் 03, 2024 11:08 PM

உடுப்பி: ''உடுப்பிக்கு வந்தால், காவித் துண்டு அணிவித்து தேவகவுடாவை வரவேற்பேன்'' என, உடுப்பி பா.ஜ., - எம்.எல்.ஏ., யஷ்பால் சுவர்ணா கூறியுள்ளார்.
மாண்டியா கெரேகோடுவில் ஹனுமன் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டதை கண்டித்து, பா.ஜ., நடத்திய போராட்டத்தில், குமாரசாமி காவித் துண்டு அணிந்து பங்கேற்றார். இதற்கு அவரது தந்தை தேவகவுடா எதிர்ப்புத் தெரிவித்தார்.
'குமாரசாமி காவித்துண்டு அணிந்தது தவறு. ம.ஜ.த., கட்சியின் துண்டை அணிந்திருக்க வேண்டும். பிரதமரும், நானும் ஒரே மேடையில் தோன்றினால் கூட, நான் காவித்துண்டு அணிய மாட்டேன்' என, தேவகவுடா கூறினார்.
இதுகுறித்து உடுப்பி பா.ஜ., - எம்.எல்.ஏ., யஷ்பால் சுவர்ணா நேற்று அளித்த பேட்டி:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ம.ஜ.த., கட்சி, எங்களுடன் கூட்டணியில் இருக்கின்றனர். காவித்துண்டு அணிய மாட்டேன் என்று, தேவகவுடா கூறி இருப்பது அவரது தனிப்பட்டதா கருத்தா அல்லது ம.ஜ.த., கட்சியின் கருத்தா என்று தெரியவில்லை. தேவகவுடா உடுப்பி வந்தால், அவருக்கு காவித் துண்டு அணிவித்து வரவேற்பேன்.
நாட்டிற்காக நிறைய பங்களிப்பு அளித்து உள்ளதால், அத்வானிக்கு பாரத ரத்னா விருது கிடைத்து உள்ளது. ரத யாத்திரை மூலம், மக்கள் மனதை வென்றார்.
ராமர் கோவில் கனவை நனவாக்கிய, பெருமையும் அத்வானிக்கு உண்டு. கோவில்களுக்கு சென்றால் குங்குமம் வைக்க, முதல்வர் சித்தராமையா மறுக்கிறார். நாட்டை பிரிக்கும் முயற்சியில் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் ஈடுபடுகிறார். அவர்கள் இருவரும் வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் சென்று வசிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.