பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை தாக்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த குற்றவாளி கைது
பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை தாக்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த குற்றவாளி கைது
UPDATED : ஜன 19, 2025 01:30 PM
ADDED : ஜன 19, 2025 06:25 AM

மும்பை: நடிகர் சயீப் அலிகானை அவரது மும்பை இல்லத்தில் கத்தியால் குத்திய நபர் மஹா., மாநிலம் தானேயில் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலி கான் வீட்டுக்குள் கடந்த ஜன., 16ம் தேதி அதிகாலை புகுந்த மர்ம நபர், அவரை ஆறு முறை கத்தியால் குத்தி தப்பி ஓடினார்.
இதில் படுகாயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை, இரு நாட்களுக்கு பின், சத்தீஸ்கரின் துர்க் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், நடிகர் சயீப் அலிகானை அவரது மும்பை இல்லத்தில் கத்தியால் குத்திய நபர் மஹா., மாநிலம் தானேயில் கைது செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என தெரியவந்துள்ளது.
இவர், மதுபான விடுதியில் வேலை பார்த்து வந்தார் என்பது தெரியவந்தது. ஜனவரி 16ம் தேதி மும்பை வீட்டில் சயீப் அலிகானை கத்தியால் குத்தியதாக அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக முகமது அலியனை போலீசார் பாந்த்ராவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதற்கிடையே, சயீப் அலி கான் குணமடைந்து வருவதால், இரண்டு அல்லது மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.