சயீப் அலி கானை குத்திய கொள்ளையன் கைது செய்யப்படவில்லை: போலீசார் விளக்கம்
சயீப் அலி கானை குத்திய கொள்ளையன் கைது செய்யப்படவில்லை: போலீசார் விளக்கம்
UPDATED : ஜன 17, 2025 03:41 PM
ADDED : ஜன 17, 2025 11:40 AM

மும்பை: நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி - நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சயீப் அலிகான். இவர் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை கரீனா கபூரை மணந்த இவர் மஹாராஷ்டிராவின் மும்பையில், பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சயீப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சயீப் அலிகான் வீட்டு பணிப்பெண் ஆயா எலியாமா பிலிப் கூறியதாவது: குளியலறையில் ஒரு நபர் மறைந்து இருப்பதை பார்த்தேன். யார் என்பதை பார்க்க விரைந்து வந்தேன். அந்த நபர் நடிகர் சயீப் அலிகான் மகன் ஜெயின் அறைக்குள் வந்தார். நான் சத்தமிட்டதும் என்னை பிளேடால் தாக்கினர். என் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. நான் அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டேன். அவர் ரூ.1 கோடி வேண்டும் என்று மிரட்டினார். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு வீட்டு, உதவியாளரும் அங்கு வந்ததால், அந்த மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்தார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகியது.
மறுப்பு
பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்தியவரை இன்று (ஜன.,17) போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது. இதனை போலீசார் மறுத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என விளக்கம் அளித்து உள்ளனர். விசாரணைக்காக ஒருவரை அழைத்து வந்துள்ளதாகவும், அவருக்கும், இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்து உள்ளனர்.
வலைவீச்சு
சயீப் அலிகானை கத்தியால் குத்தியவன் பாந்தரா ரயில் நிலையம் அருகே தென்பட்டு உள்ளான். இதனால், அப்பகுதியில் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடினர். மேலும், இச்சம்பவத்திற்கு பிறகு அவன் ரயில் மூலம் வசை விரார் பகுதிக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதனால், வசாய், நலசோபரா மற்றும் விரார் பகுதிகளிலும் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
பாதுகாப்பு கேட்கவில்லை
மாநில உள்துறை இணை அமைச்சர் யோகேஷ் கடம் கூறியதாவது: கொள்ளையடிக்க நடந்த முயற்சியின் போது தாக்குதல் நடந்துள்ளது. இதில் எந்த கும்பலுக்கும் தொடர்பில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சயீப் அலிகான் பாதுகாப்பு எதையும் கேட்கவில்லை. திருடும் நோக்கத்துடனேயே கொள்ளையன் வீட்டிற்குள் வந்துள்ளான். அப்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
சயீப் அலி கானுக்கு சிகிச்சை அளித்த நியூரோ சர்ஜன் டாக்டர் நிதின் டாங்கே கூறுகையில், ''சயீப் உடல் நலம் தேறி வருகிறார். இன்று அவரை நடக்க வைத்தோம். நன்றாக நடந்தார். அவரது காயங்களை பார்த்த வகையில், ஐ.சி.யு.,வில் இருந்து வார்டுக்கு அனுப்பும் வகையில் தேறி உள்ளது. அவர் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். முழு ஓய்வு அவசியம். ஒரு வாரத்துக்கு நடமாடக்கூடாது,'' என்றார்.