சயீப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு: கைதானவரின் கைரேகைகள் பொருந்தாததால் திடீர் திருப்பம்
சயீப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு: கைதானவரின் கைரேகைகள் பொருந்தாததால் திடீர் திருப்பம்
ADDED : ஜன 26, 2025 11:37 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த நபரின் கைரேகை, சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கைரேகை தரவுகளில், ஒன்றில் கூட பொருந்தி போகாதது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், 54, வசித்து வருகிறார்.
கடந்த 16ம் தேதி அதிகாலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் ஆறு முறை குத்தி விட்டு தப்பினார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சயீப் அலி கான், அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இது தொடர்பாக, 40க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து மும்பை போலீசார் விசாரித்தனர்.
கடந்த 19ம் தேதி, தானே மாவட்டத்தில் ஷரிபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ஷரிபுல் இஸ்லாம், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், வேறொரு பெயரில் நம் நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததும், திருடுவதற்காக நடிகர் சயீப் வீட்டுக்குள் அவர் சென்றதும் தெரிய வந்தது.
இந்நிலையில், சம்பவத்தன்று நடிகர் சயீப் அலி கான் வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகை தரவுகளுடன், கைதான ஷரிபுல் இஸ்லாமின் கைரேகை பொருந்திப் போகிறதா என்பதை ஆய்வு செய்ய, அவரது கைரேகை மாதிரிகள், மாநில சி.ஐ.டி., போலீசாருக்கு அனுப்பப்பட்டன.
ஆய்வின் முடிவில், சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில் ஒன்றில் கூட, ஷரிபுல் இஸ்லாமின் கைரேகைகள் ஒத்துப் போகவில்லை. இது, வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, சயீப் அலி கானின் அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவான நபருக்கும், கைதான ஷரிபுல் இஸ்லாமுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக, சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது கைரேகை தரவுகள் ஒத்துப் போகாதது, மும்பை போலீசாருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

