சயீப் அலிகானுக்கு அடுத்த அதிர்ச்சி; ரூ.15 ஆயிரம் கோடி சொத்து கை நழுவும் அபாயம்
சயீப் அலிகானுக்கு அடுத்த அதிர்ச்சி; ரூ.15 ஆயிரம் கோடி சொத்து கை நழுவும் அபாயம்
UPDATED : ஜன 22, 2025 09:48 PM
ADDED : ஜன 22, 2025 09:47 PM

போபால்: போபாலின் கடைசி நவாபின் வாரிசான பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகளை அரசு கையகப்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.
போபாலின் கடைசி நவாப் ஆக இருந்தவர் ஹமீதுல்லா கான். இவருக்கு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள், அரண்மனைகள், காலியிடம், கடைகள் என ஏராளமான சொத்துக்கள் இருந்தன.இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் அபிதா சுல்தான், நாட்டுப் பிரிவினையை தொடர்ந்து 1950ல் பாகிஸ்தான் சென்றார். இதனால், அவரது குடியுரிமை பறிபோனது.

இரண்டாவது மகள் சஜிதா சுல்தானா. இவர் இந்தியாவில் தங்கியதால், அதிகாரப்பூர்வ வாரிசானார். சஜிதாவின் பேரன் தான் நடிகர் சயீப் அலிகான். இதனால், சயீப் அலிகான் இந்த சொத்துகளில் ஒரு பகுதியை மரபுரிமையாக பெற்றுள்ளார். இவரை, வங்கதேசத்தை சேர்ந்தவன் கத்தியால் குத்தியதால் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பி உள்ளார்.

பிரிவினையின் போது, பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துகளை எதிரி சொத்துகளாக அறிவித்து அரசு கையகப்படுத்த முடியும். அந்த அடிப்படையில் அபிதா சுல்தான், பாகிஸ்தான் சென்றதால், அவரது சொத்துகளை 2014ல் எதிரி சொத்துகளாக அறிவித்து கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சயீப் அலிகான், அவரது சகோதரிகள், தாயார் ஷர்மிளா தாகூர் சார்பில் ம.பி., ஐகோர்ட்டில் கடந்த 2015ம் ஆண்டு முறையீடு செய்யப்பட்டது. விசாரித்த, ஐகோர்ட் மத்திய அரசின் நோட்டீசுக்கு தடை விதித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், சயீப் அலிகான் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சயீப் அலிகான் தரப்பினர் சொத்து வேண்டும் என்றால், 30 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. ஆனால், 30 நாட்கள் முடிவடைந்து விட்டதாகவும், சயீப் அலிகான் முறையீடு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக சயீப் அலிகான் குழந்தை பருவத்தை கழித்த வீடு, நூர் உஷ் சபா அரண்மனை, பங்களா, ஆமதாபாத் அரண்மனை உள்ளிட்ட 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அரசு கையகப்படுத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது. 2019ல், சஜிதா சுல்தானை சட்டப்பூர்வ வாரிசாக நீதிமன்றம் அங்கீகரித்து இருந்தது. இருப்பினும், இந்தத் தீர்ப்பானது, சயீப் அலிகான் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
போபால் கலெக்டர் கூறியதாவது:
இந்த சொத்துகள் கடந்த 72 ஆண்டுகளாக யாரிடம் உள்ளது என ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளது. இங்கு வசிக்கும் தனி நபர்கள், மாநில அரசின் சட்டப்படி வாடகைதாரர்களாக கருதப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், இந்த சொத்துகளில் வசிக்கும் 1.5 லட்சம் பேர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால், தாங்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டுமா என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

