தூக்கம் கண்களை தழுவியது! சயீப் அலிகான் பாதுகாவலர்கள் அசட்டையால் புகுந்த கொள்ளையன்; போலீசார் விசாரணையில் 'திடுக்'
தூக்கம் கண்களை தழுவியது! சயீப் அலிகான் பாதுகாவலர்கள் அசட்டையால் புகுந்த கொள்ளையன்; போலீசார் விசாரணையில் 'திடுக்'
ADDED : ஜன 22, 2025 08:51 AM

மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள் கொள்ளையன் புகுந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த இருவர் தூங்கி கொண்டிருந்தனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள், கடந்த 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் புகுந்தார். சயீப் அலிகான் அவரை பிடிக்க முயன்ற போது கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாள் சிகிச்சைக்கு பின் சயீப் நேற்று நலமுடன் வீடு திரும்பினார். இதற்கிடையே சயீபை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபரை, கடந்த 19ம் தேதி மும்பை போலீசார் கைது செய்தனர். அவரின் பெயர் ஷரிபுல் இஸ்லாம் முகமது அமின் பக்கீர், 30, என்பதும், வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அவரிடம் இருந்த மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:சி.சி.டி.வி., கேமராக்கள் எதுவும் பொருத்தப்படாத பிரதான நுழைவாயில் வழியாக, நடிகர் சயீப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய, ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் (30) வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அப்போது வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த, இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் கேபினிலும், மற்றொருவர் கேட் அருகிலும் தூங்கி உள்ளனர். இதனை கண்டு எல்லைச் சுவரைத் தாண்டி, கொள்ளையன் உள்ளே நுழைந்து இருக்கிறான். தனது காலணிகளை அகற்றி, சத்தம் வராமல் இருக்க பையில் வைத்திருந்துள்ளான். தனது மொபைல் போனையும் ஆப் செய்து வைத்திருந்திருக்கிறான். சில இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.