ADDED : மார் 07, 2024 01:59 AM
கொல்கத்தா, அங்கன்வாடி மற்றும் ஆஷா சுகாதார பணியாளர்களுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஊதிய உயர்வு அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் நேற்று, ஆஷா எனப்படும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை முதல்வர் மம்தா வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, மாதம் 750 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்படுகிறது.
இதன் வாயிலாக அவர்கள் ஏற்கனவே பெற்று வரும் 8,250 என்ற மாத ஊதியம், இனி 9,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
இதேபோல் அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் மாதம் 500 ரூபாய் உயர்த்தப்படுகிறது.
இதன் வாயிலாக ஏற்கனவே அவர்கள் பெற்று வரும் 6,000 ரூபாய், இனி 6,500 ரூபாயாக உயரும். இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்., 1 முதல் அமலுக்கு வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

