எம்.பி.,க்களுக்கு சம்பளம் 24 சதவீதம்... உயர்வு! இதர படிகள், ஓய்வூதிய பலன்களும் 'விர்ர்ர்'
எம்.பி.,க்களுக்கு சம்பளம் 24 சதவீதம்... உயர்வு! இதர படிகள், ஓய்வூதிய பலன்களும் 'விர்ர்ர்'
ADDED : மார் 25, 2025 02:22 AM
புதுடில்லி: எம்.பி.,க்களின் மாத சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியத்தை, 24 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, எம்.பி.,க்களின் மாத சம்பளம், 1 லட்சம் ரூபாயில் இருந்து, 1.24 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
எம்.பி.,க்களுக்கான மாத சம்பளம் கடைசியாக, 2018ல் உயர்த்தப்பட்டது. மாதம், 50,000 ரூபாயாக இருந்த சம்பளத்தை, 1 லட்சம் ரூபாயாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உயர்த்தினார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மற்றும் படிகளை பணவீக்கக் குறியீட்டுக்கு ஏற்ப தானாக மாற்றி அமைக்கும் வழிமுறையையும் ஜெட்லி அமைத்தார். இந்நிலையில், எம்.பி.,க்களின் சம்பளம், இதர படிகள், ஓய்வூதியத்தை ஏழு ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
இதற்கான அறிவிப்பை பார்லிமென்ட் விவகாரத்துறை நேற்று வெளியிட்டது. அதன் விபரம்:
l எம்.பி.,க்களின் மாத சம்பளம், 24 சதவீதம் உயர்த்தப்படுகிறது. தற்போது வழங்கப்படும் மாத சம்பளமான, 1 லட்சம் ரூபாய், 1.24 லட்சம் ரூபாயாக உயர்கிறது
l பார்லி., கூட்டத்தொடர் மற்றும் பார்லி., நிலைக்குழு கூட்டங்களில் எம்.பி.,க்கள் பங்கேற்க வரும்போது, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரிபடி, 2,000 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
l முன்னாள் எம்.பி.,க்களுக்கான ஓய்வூதியம், 25,000 ரூபாயில் இருந்து, 31,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
l ஐந்தாண்டுகளை கடந்து பதவியில் நீடிக்கும் எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதம், 2,000 ரூபாய் கூடுதல் ஓய்வூதியம், 2,500 ரூபாயாக உயர்கிறது
l மாதாந்திர தொகுதி படி, 70,000 ரூபாயில் இருந்து, 87,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர அலுவலக செலவுத் தொகை 60,000 ரூபாயில் இருந்து, 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.