ADDED : அக் 11, 2024 07:08 AM
தாவணகெரே: குழந்தை இல்லாத தம்பதிக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆண் குழந்தையை குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டனர். குழந்தையின் தாய், டாக்டர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
தாவணகெரே டவுன் வினோபாநகரில் வசிக்கும் தம்பதி பிரசாந்த்குமார் - ஜெயா. இவர்களுக்கு திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது; குழந்தை இல்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில், பிரசாந்த்குமார் வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் விசாரித்த போது தம்பதி, மழுப்பலாக பதில் அளித்தனர். இதுபற்றி தாவணகெரே குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.
நேற்று முன்தினம் காலை குழந்தைகள் நல அதிகாரி கவிதா தலைமையிலான ஊழியர்கள், பிரசாந்த்குமார் வீட்டிற்கு சென்றனர்.
குழந்தையின் பிறப்பு சான்றிதழை சரிபார்த்த போது போலியானது என்று தெரிந்தது. பிரசாந்த்குமார், ஜெயாவிடம் விசாரித்தனர். இரண்டு மாத ஆண் குழந்தையை, 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, குழந்தையின் தாய் காவ்யா, தனியார் மருத்துவமனை டாக்டர் பாரதி, ஊழியர் மஞ்சுளா, இடைத்தரகர்கள் வாதிராஜ், சுரேஷ், ரமேஷ் ஆகியோர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
தாவணகெரேயை சேர்ந்த காவ்யாவை, மஹாராஷ்டிராவை சேர்ந்தவரை திருமணம் செய்தார். குடும்ப தகராறில் இருவரும் விவாகரத்து செய்தனர். கர்ப்பிணியாக இருந்த காவ்யா, தாவணகெரேவுக்கு வந்து தனியாக வசித்தார்.
தனியார் மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. வளர்க்க முடியாது என்பதால், குழந்தையை விற்க ஒப்பு கொண்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.