எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு சல்யூட்; சொல்கிறார் ராகுல்
எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு சல்யூட்; சொல்கிறார் ராகுல்
ADDED : டிச 13, 2025 06:03 PM

புதுடில்லி; உள்ளாட்சித் தேர்தல்களில் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக கேரள மக்களுக்கு சல்யூட் என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார்.
கேரள உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் பினராயி விஜயனின் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் கூட்டணியே கைப்பற்றி உள்ளது. இது குறித்து ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்., கூட்டணிக்கு கேரள மக்கள் பெருவாரியாக அளித்த ஓட்டு எங்கள் மீது உள்ள நம்பிக்கை காட்டுகிறது.
எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக கேரள மக்களுக்கு சல்யூட். இது ஒரு மகிழ்ச்சியான தீர்ப்பு. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அபார வெற்றியை நோக்கிச் எங்களது கூட்டணி செல்கின்றன. பொறுப்புணர்வுள்ள நிர்வாகத்தை கேரளா விரும்புகிறது. கேரள மக்களின் பக்கம் நிற்பது, அவர்களின் அன்றாட கவலைகளை நிவர்த்தி செய்வது மற்றும் வெளிப்படையான, மக்கள் முன்னுரிமை நிர்வாகத்தை உறுதி செய்வோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியை சாத்தியமாக்க, அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்த கட்சியினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

