மின்சார திருட்டில் ஈடுபட்டதாக சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்கு
மின்சார திருட்டில் ஈடுபட்டதாக சமாஜ்வாதி எம்.பி., மீது வழக்கு
ADDED : டிச 20, 2024 01:41 AM

சம்பல், உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜியாவுர் ரஹ்மான் பாரக் மின்சார திருட்டில் ஈடுபட்டதாக, அம்மாநில மின்வாரியம் அளித்த புகாரின் கீழ் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் சம்பல் லோக்சபா தொகுதி எம்.பி., ஜியாவுர் ரஹ்மான் பாரக்.
இவரது வீட்டில் நேற்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின்வாரிய ஊழியர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது மின் மீட்டர் இல்லாமல், மின்சாரம் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எம்.பி., மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
சம்பலில் ஷாஹி ஜமா மசூதியில் கடந்த நவ., 24ல் ஆய்வு நடத்தியதற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
இதில், பொது மக்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை துாண்டியதாக எம்.பி., ஜியாவுர் ரஹ்மான் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் கைது செய்வதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், மின் திருட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது.