முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சமாஜ்வாதி: மெயின்புரி தொகுதியில் அகிலேஷ் மனைவி போட்டி
முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சமாஜ்வாதி: மெயின்புரி தொகுதியில் அகிலேஷ் மனைவி போட்டி
ADDED : ஜன 30, 2024 05:58 PM

லக்னோ: உ.பி.,யில் லோக்சபா தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரத்தை முதல் ஆளாக ஆரம்பித்து வைத்தார் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ். அங்கு காங்கிரசுக்கு 11 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் சமீபத்தில் அறிவித்தார். ராஷ்ட்ரீய லோக் தளத்துக்கு 7 தொகுதிகளையும் சமாஜ்வாதி ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அதற்குள் வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். அக்கட்சி போட்டியிட உள்ள 62 தொகுதிகளில் முதல்கட்டமாக 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டார்.
இதில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மீண்டும் மெயின்புரி தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு பிறகு மெயின்புரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ் முதல்முறையாக எம்.பி.,யானார்.