'சாம்சங், ஆப்பிள்' எதிர்ப்பு ஆதார் செயலி கட்டாய திட்டம் ரத்து
'சாம்சங், ஆப்பிள்' எதிர்ப்பு ஆதார் செயலி கட்டாய திட்டம் ரத்து
ADDED : ஏப் 19, 2026 12:10 AM
புதுடில்லி: சந்தையில் புதிதாக விற்பனைக்கு வரும், 'மொபைல் போன்'களில், ஆதார் செயலியை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வந்த நிலையில், இதற்கு, 'சாம்சங், ஆப்பிள்' உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.
நமக்கான அடையாள ஆவணமாக ஆதார் உள்ளது. யு.ஐ.டி.ஐ.ஏ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதை நிர்வகிக்கிறது. வங்கி, தொலைத் தொடர்பு, விமான பயண சேவை, அரசு நலத் திட்டங்கள் உட்பட பல்வேறு சேவைகளை பெற ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
ஜனவரியில், 'மொபைல் போன்' வாயிலாக பயன் படுத்தப்படும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அடையாள அட்டையாகவும், வாடிக்கையாளர் விபரங்களான கே.ஒய்.சி., புதுப்பித்தல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு பயன் படுத்தலாம்.
இந்நிலையில், சந்தைக்கு வரும் அனைத்து புதிய, 'ஸ்மார்ட் போன்'களிலும் ஆதார் செயலி கட்டாயம் எனும் திட்டத்தை யு.ஐ.டி.ஐ.ஏ., முன் மொழிந்தது. இதை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஏற்றது. ஆனால், இந்த முடிவுக்கு தகவல் தொழில்நுட்ப உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக சங்கத்தில் உள்ள, 'ஆப்பிள், சாம்சங்'உள்ளிட்ட நிறுவனங்கள் பயனர் தனியுரிமை, சாதன பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பியிருந்தன.
இதையடுத்து ஆதார் செயலியை மொபைல் போன்களில் கட்டாயம் நிறுவும் திட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு முன், 'சஞ்சார் சாத்தி' என்ற செயலியை, மொபைல் போன்களில் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. எதிர்ப்பு எழுந்ததால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது.
