ADDED : ஜன 08, 2024 10:54 PM
மைசூரு: மைசூரில் பெண்களின் பாதுகாப்புக்காக, 'சாமுண்டி' செயற்படை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கும் விஷமிகளுக்கு, இந்த படை பாடம் புகட்டும்.
பொது இடங்கள், பள்ளி, கல்லுாரிகள், பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவு உட்பட பல பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக, மைசூரில் 'சாமுண்டி' செயற்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையில் 40 மகளிர் ஏட்டுகள் உள்ளனர்.
இரண்டு ஷிப்ட்டுகளில் இப்படையினர், மைசூரு நகரை சுற்றி வந்து, பெண்களுக்கு காவலாக இருப்பர். காலை 8:00 முதல், இரவு 8:00 மணி வரை இப்படை செயல்படும்.
'சாமுண்டி' படையினர் ரோந்து சுற்ற, இரண்டு வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மகளிர் ஏ.எஸ்.ஐ., மகளிர் தலைமை ஏட்டு மற்றும் ஏட்டு இருப்பர். இவர்களுடன் ஓட்டுனராக ஆண் ஏட்டுவும் இருப்பார்.
இது தொடர்பாக, மைசூரு நகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் கூறியதாவது:
மைசூரு நகரில் பெண்களின் பாதுகாப்புக்கு, 'சாமுண்டி' தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தி, பாதுகாப்பு அளிக்கும். பெண்களின் பாதுகாப்புக்காக அமலில் உள்ள சட்டங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
மைசூரு முழுதும் ரோந்து சுற்றுவர். விஷமிகளின் தொந்தரவை கட்டுப்படுத்தி, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பஸ் நிலையம், ரயில் நிலையம், கோவில், கார்மென்ட்ஸ்கள் அருகில், ரோந்து சுற்றுவதன் மூலம் பெண்களுக்கு விஷமிகளால் ஏற்படும் தொந்தரவை கட்டுப்படுத்தும்.
பெண்கள் அதிகம் உள்ள பகுதிகளில், சந்தேகத்துக்கு இடமாக நடமாடும் நபர்களை எச்சரிக்கும். ஹாஸ்டல், பேயிங் கெஸ்ட் மையங்களில் வசிக்கும் பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாணவியருக்கு தற்காப்பு குறித்து, தெரிவிக்கப்படும். போதைப் பொருட்களின் பின்விளைவுகள் பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பள்ளி, கல்லுாரிகள், பெண்கள் பணியாற்றும் இடங்களில், சாமுண்டி படையினர் கூட்டம் நடத்தி, பெண்களின் பாதுகாப்பு குறித்து விவரிப்பதுடன், பிரச்னை ஏற்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.