ADDED : அக் 12, 2024 01:37 AM

சிக்கமகளூரு : ''சனாதன தர்மம்என்றும் நிலைத்து நிற்கும்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கூறினார்.
சிக்கமகளூரு அப்பிகேரி கிராமத்தில் நடந்த, நவராத்திரி நிகழ்ச்சியில் பா.ஜ., - எம்.எல்.சி., ரவி பேசியதாவது:
அனைத்து மதத்தினரையும் சமமாக பார்ப்பது ராஜதர்மம். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டிற்காக ஒன்றுபடுவது தேசிய மதம்.
ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கும் போது, பாகிஸ்தான் வெற்றி பெற்றால் நம்மில் சிலர் பட்டாசு வெடிக்கின்றனர். இது தேசிய பேரிடராக இருக்கும்.
மற்ற நாடுகள், இந்தியாவை உலகளாவிய குருவாக பார்க்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
சனாதன தர்மம், உலக நலனில் அக்கறை கொண்டது. அது என்றும் நிலைத்து நிற்கும். சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. இந்தியாவில் கொள்கை சார்ந்த கலாசாரம் உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அவரது வாழ்க்கையின் நெறிமுறைகளால் அனைவராலும் மதிக்கப்படுகிறார். அதுபோல ராமரும், ஹரிசந்திரனும் இன்றும் அனைவரால் மதிக்கப்படுகின்றனர். நாமும் நீதியின் வழி நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.