சனாதன பேச்சு குறித்த வழக்கு: உதயநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி
சனாதன பேச்சு குறித்த வழக்கு: உதயநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி
ADDED : ஜன 28, 2025 06:13 AM

புதுடில்லி : சனாதன பேச்சு குறித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்ததை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு பங்கேற்றது அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்கக் கோரியும், சென்னையில் நடந்த அந்த நிகழ்ச்சியின் பின்னணியைக் கண்டறிய சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் இருந்து வந்தன.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக ஏன் உயர் நீதிமன்றத்தை நாடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மேற்கொண்டு விசாரிக்க எதுவும் இல்லை' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது பேசிய மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், 'நாங்கள் மனுவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் கோருகிறோம்' என்றனர். இதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.