கேரளாவில் சந்தன மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது
கேரளாவில் சந்தன மரம் கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த இருவர் கைது
ADDED : நவ 25, 2024 07:47 AM

பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம். இங்குள்ள சுங்கம் சரக பகுதிக்குட்பட்ட இலத்தோடு பிரிவில், குச்சிமுடி மலையில் ஜன., 7ல் வனத்துறை ஊழியர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தன மரங்களை அறுத்து கடத்தியுள்ளதை கண்டுபிடித்தனர். ஒரு கும்பல் சந்தன மரக்கட்டைகளை கடத்திக்கொண்டு செல்வதை கவனித்தனர். பின்தொடர்ந்து பிடிக்க முயன்ற போது, சந்தன மரக்கட்டைகளை போட்டு விட்டு அவர்கள் தப்பினர். வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பரம்பிக்குளம் புலிகள் சரணாலய துணை இயக்குனர் சுஜித் மேற்பார்வையில், சுங்கம் வனச்சரக அதிகாரி அஜயன் தலைமையில், சிறப்பு குழு அமைத்து, அறிவியல் முறையில் விசாரணை நடத்தினர்.இதில், அக்., 26ம் தேதி கடத்தல் கும்பலைச் சேர்ந்த திருவண்ணாமலை, மாசிலாம்படியைச் சேர்ந்த குமார், 30, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை, மாசிலாம்படியைச் சேர்ந்த அண்ணாமலை, 56, அருள், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், கும்பலைச் சேர்ந்த திருப்பத்துார், வேல்பத்துார் பகுதியைச் சேர்ந்த திருப்பதியை தேடி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.