ADDED : டிச 03, 2024 07:48 AM
கோலார்: கோலாரின் மல்லசந்திரா கிராமத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர்.
கர்நாடக அரசு, விவசாயிகள் தங்களின் நிலங்களில் சந்தன மரங்கள் வளர்க்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தன மரங்களால் நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பினர். இதனால் பலரும் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து வருகின்றனர்.
கோலாரின் மல்லசந்திரா என்ற கிராமத்தில் தனக்குச் சொந்தமான 3.12 ஏக்கர் நிலத்தில், 16 ஆண்டுகளாக பச்சப்பா என்பவர் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். ஏற்கனவே 2016ல் ஒருமுறை மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து வேம்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அதே நிலத்தில் மர்ம நபர்கள் 25 மரங்கள் வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பச்சப்பா கூறுகையில், “இந்த மரங்களை சாண்டில் சோப் நிறுவனத்திற்கு விற்க இருந்தேன். ஆனால் இரவோடு இரவாக மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தியுள்ளனர். அவற்றின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் இருக்கும். வனத்துறையை சேர்ந்தவர்கள் மீதுதான் சந்தேகம் உள்ளது.
போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளேன்,” என்றார்.