சந்தேஷ்காலி சம்பவம் : ஆளும் திரிணமுல் காங், பிரமுகர் கைது
சந்தேஷ்காலி சம்பவம் : ஆளும் திரிணமுல் காங், பிரமுகர் கைது
ADDED : பிப் 17, 2024 08:58 PM

கோல்கட்டா: 'மேற்கு வங்கத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ரவுடி கும்பல் அராஜகம் செய்த சம்பவத்தில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்., பிரமுகர் ஷிபு பிரசாத் ஹஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜகான் ஷேக் என்பவரும் இவரது கூட்டாளிகளும் அப்பகுதியினரிடம் பலவந்தமாக நிலங்களை அபகரித்துக்கொண்டும், அங்குள்ள பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி, சந்தேஷ்காலி பகுதி வாழ் பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை மம்தா அரசும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற மாநில பா.ஜ., தலைவர் சுகந்தா மஜும்தார், போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சட்டத்தை காப்பாற்றும் போலீசார், ரவுடிகளுடன் கைகோர்த்துக் கொண்டு அங்கு அடக்குமுறையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பெரிதானதால் அரசு நடவடிக்கை எடுத்தது, இதையடுத்து ஷிபு பிரசாத் ஹஸ்ரா என்ற திரிணமுல் காங், பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இவர் ரவுடி கும்பல் தலைவனான ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளி என தெரியவந்தது.