ADDED : பிப் 16, 2024 05:57 PM

கோல்கட்டா: மேற்குவங்கம் மாநிலம் சந்தேஷ்காலியில் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது ஊழல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.
ஷாஜகானை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தால், சந்தேஷ்காலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் விதமாக, சந்தேஷ்காலி உட்பட ஏழு கிராம பஞ்சாயத்துகளில், வரும் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி ஜனாதிபதியிடம் தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத் தலைவர் அருண் ஹல்தர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.