ADDED : ஜன 05, 2024 04:12 AM
பொதுவாக கிராமங்களில் உள்ள கோவில்களில், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருக்கும். அதே போன்று, பெலகாவியில் கிரனகி கிராமத்தின் கோவிலிலும், மாறுபட்ட நடைமுறை, சம்பிரதாயம் உள்ளது. காலங்காலமாக மக்கள் இதை பின்பற்றி வருகின்றனர்.
கர்நாடகாவில் கிராமப்புற கோவில்கள் எண்ணிக்கை அதிகம். புராதன சிறப்பு மிக்க கோவில்களும் இங்குள்ளன. ஆனால், பல கோவில்கள் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இவற்றை அடையாளம் கண்டு, மக்களுக்கு அறிமுகம் செய்வதிலும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், ஆர்வம் காண்பிப்பது இல்லை. இத்தகைய கோவில்களில், சங்கமநாத சுவாமி கோவிலும் ஒன்று.
பெலகாவி, அதானியின், கிரனகி கிராமத்தில் சங்கமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு வழிபாடுகள் பின்பற்றப்படுகின்றன. கிராமத்தில் யாரும் பல மாடி கட்டடம் கட்ட கூடாது, திருடக் கூடாது, இரவில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் கிராமத்தில் உள்ளன.
கிராமத்தில் சங்கமநாத சுவாமி கோவில் கோபுரத்தை விட, உயரமாக யாரும் வீடு கட்டியதில்லை. ஒருவேளை கட்டினால், கடவுளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என, அஞ்சுகின்றனர். இரவு நேரத்தில் சங்கமநாத சுவாமி கோவில் வளாகத்தில் சுற்ற கூடாது.
கோவிலின் சுற்றுப்பகுதிகளில் யாராவது திருடினால், அவர்களுக்கு கடவுளின் தண்டனை உறுதி.
ஒருவேளை திருடினால், கடவுள் வேதாளம் உருவெடுத்து, திருடிய நபர்களை பின் தொடர்ந்து தண்டிப்பதாக, மக்கள் நம்புகின்றனர்.
கடவுளின் கட்டளையை மீறி நடந்து கொண்ட, பல குடும்பங்கள் வீதிக்கு வந்து, பிரச்னைகளில் சிக்கி, அமைதியின்மையால் தவித்து தற்போது ஊரை விட்டே சென்றுவிட்டார்களாம்.
எனவே, நுாற்றாண்டுகளுக்கு மேலாக, கடவுளுக்கு பயந்து மக்கள் நடந்து கொள்கின்றனர்.
பல மாடி வீடுகள் கட்டுவதில்லை. இரவு நேரத்தில் கோவிலின் சுற்றுப்பகுதிகளில் நடமாடுவதில்லை. மற்றவரின் பொருட்களை திருடுவதில்லை. கட்டுப்பாடுடன் நடந்து கொள்கின்றனர்.
கடவுள் மீதான பக்தியும், பயமும் கிராமத்தில் சிறந்த கலாசாரம், சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.