ஹுப்பள்ளி விமான நிலையத்துக்கு சங்கொல்லி ராயண்ணா பெயர்?
ஹுப்பள்ளி விமான நிலையத்துக்கு சங்கொல்லி ராயண்ணா பெயர்?
ADDED : ஜன 27, 2024 12:27 AM

தார்வாட், -“ஹுப்பள்ளி விமான நிலையத்துக்கு கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணா பெயரை சூட்ட, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது,” என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் நேற்று நடந்த கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா நினைவு தின நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் பங்கேற்று, முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு கெம்பே கவுடாவின் பெயரை பரிந்துரைத்தது நாங்கள் தான். இதேபோல பிற விமான நிலையங்களுக்கு ராயண்ணா, பசவண்ணா, குவெம்பு, கனகதாசர், மகாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும்.
அந்த வகையில், ஹுப்பள்ளி விமான நிலையத்துக்கு கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணா பெயரை சூட்ட, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது
சமுதாய மாற்றத்தில் உடன்படாத, சம வாய்ப்புகளை ஏற்காத, சமத்துவமின்மையை வளர்க்க விரும்பும் மக்கள், இன்னும் நம்மிடையே இருக்கின்றனர்.
அத்தகையவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சுதந்திர காதலரும், நாட்டுப் பற்றாளருமான சங்கொல்லி ராயண்ணா, தந்திரத்தால் பிடிக்கப்பட்டு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ராயண்ணாவின் தேசபக்தி, தியாகம் காரணமான அவரை, அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் ராயண்ணா பிறக்க வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்புகள் பகிரப்பட வேண்டும் என்பதே நமது அரசியல் அமைப்பின் விருப்பம். பசவண்ணாவின் ஆசையும் அதுதான். குவெம்புவின் விருப்பமும் அதுதான்.
இவ்வாறு அவர் பேசினார்.

