டாக்டர் கொலை வழக்கு உண்மை கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராய் திடுக்கிடும் தகவல்
டாக்டர் கொலை வழக்கு உண்மை கண்டறியும் சோதனையில் சஞ்சய் ராய் திடுக்கிடும் தகவல்
ADDED : ஆக 26, 2024 11:25 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு படித்து வந்த பயிற்சி பெண் டாக்டர், இரவு பணியில் இருந்தபோது மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவரை கைது செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
ஆதாரம்
சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று நடத்தினர். எவ்வித பதற்றமுமின்றி, சஞ்சய் ராய் இந்த விசாரணைக்கு ஆஜரான நிலையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை சுட்டிக்காட்டி சி.பி.ஐ., அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், 'நான் ஒரு அப்பாவி. அந்த அறைக்கு செல்லும் முன், அந்த பெண் கொல்லப்பட்டிருந்தார்.
'அவரது உடலை பார்த்து அச்சமடைந்து அந்த அறையை விட்டு நான் வெளியேறி விட்டேன். இக்குற்றச் செயலை நான் செய்யவில்லை. நான் நிரபராதி' என, குறிப்பிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும்பாலானவற்றிற்கு அவர் கூறிய பதில்கள் பொய் என, உண்மை கண்டறியும் சோதனை கருவியில் சுட்டிக்காட்டியதாக தகவல் வெளியானது.
எனினும், முகத்தில் ஏற்பட்ட காயம் குறித்தும், சம்பவத்தின் போது அந்த அறைக்கு ஏன் சென்றீர்கள் என சி.பி.ஐ., அதிகாரிகள் கேள்வி எழுப்பியதற்கும், உரிய விளக்கத்தை சஞ்சய் ராய் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
முன்னதாக, கோல்கட்டா போலீசாரின் விசாரணையின் போது, இந்த குற்றச்செயலை செய்ததை சஞ்சய் ராய் ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது தான் ஒரு நிரபராதி என கூறி வருகிறார்.
ஆவணங்கள் பறிமுதல்
கொலை சம்பவம் நடந்த மருத்துவ கல்லுாரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷிடமும் விசாரணை நடந்து வருகிறது.
சந்தீப் கோஷ் கல்லுாரி முதல்வராக இருந்தபோது, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, நிதி முறைகேடு புகார்கள் குறித்து ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், முன்னாள் துணை முதல்வரும், மருத்துவ கண்காணிப்பாளராகவும் இருந்த சஞ்சய் வசிஷ்ட் உட்பட 15 பேரின் வீடுகளில் நேற்று முன்தினம் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பல மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சந்தீப் கோஷ், சஞ்சய் வசிஷ்ட், தடயவியல் துறை பேராசிரியர் ஆகியோரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள், தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், மூன்று தனியார் மருந்து நிறுவனங்கள் மீதும் மூன்று பிரிவு களின்கீழ் சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.