பயிற்சி டாக்டர் கொலையில் சஞ்சய் ராய குற்றவாளி ! கோல்கட்டா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தண்டனை விபரம் நாளை அறிவிப்பு
பயிற்சி டாக்டர் கொலையில் சஞ்சய் ராய குற்றவாளி ! கோல்கட்டா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தண்டனை விபரம் நாளை அறிவிப்பு
ADDED : ஜன 19, 2025 12:47 AM

கோல்கட்டா மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என, நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விபரம் நாளை வெளியிடப்பட உள்ளது.
,
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது.
தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்த பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.
மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நடந்த இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரியும், ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரி பயிற்சி டாக்டர்கள் உட்பட, நாடு முழுதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன.
போராட்டங்கள்
இதையடுத்து, மருத்துவ கல்லுாரி முதல்வர் சந்தீப் கோஷ், மற்றொரு கல்லுாரிக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போராட்டங்கள் தீவிரமானதை தொடர்ந்து, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் கோயலும் மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது பாலியல் பலாத்காரம் செய்தது, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கோல்கட்டாவின் சியல்டாவில் உள்ள மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிபதி அனிர்பன் தாஸ் விசாரித்து வந்தார்.
வீடியோ பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, கடந்தாண்டு நவ., 12ல் துவங்கியது.
ஊர்ஜிதம்
மொத்தம், 50 பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணை, கடந்த 9ம் தேதி முடிந்த நிலையில், நீதிபதி நேற்று அளித்த தீர்ப்பு:
பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து, முகத்தை மூடி மூச்சு திணறடித்து கொலை செய்தது ஆகியவை சி.பி.ஐ.,யால் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த சம்பவத்தில், சஞ்சய் ராய் குற்றவாளி என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நாளை பகல் 12:30 மணிக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த தீர்ப்பை பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் வரவேற்றனர்.அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
போராட்டங்களில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.