சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சஞ்சீவ் கன்னா!
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சஞ்சீவ் கன்னா!
UPDATED : நவ 11, 2024 10:07 AM
ADDED : நவ 11, 2024 10:04 AM

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இன்று (நவ.,11) நீதிபதி சஞ்சீவ் கன்னா 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரது பதவிக்காலம் மே 13, 2025ம் ஆண்டு வரை நீடிக்கும்.
கடந்த வந்த பாதை
* 1960ம் ஆண்டு மே 14ம் தேதி டில்லியில் சஞ்சீவ் கன்னா பிறந்தார். டில்லி பல்கலையில் சட்டம் பயின்றார்.
* இவரது தந்தை டில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கன்னா டில்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றினார்.
* இவர் 1983ம் ஆண்டு டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கன்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.
* கடந்த 2004ம் ஆண்டு டில்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.
* டில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.
* ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
* இவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் ஆலோசகராகவும் உள்ளார்.