51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்றார்
51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்றார்
ADDED : நவ 12, 2024 12:37 AM

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நேற்று பதவி ஏற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து, 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சஞ்சீவ் கன்னா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் தலைமை நீதிபதிகள் சந்திரசூட், ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீதித்துறையில் சஞ்சீவ் கன்னாவின் குடும்பம் மூன்றாவது தலைமுறையாக சேவையாற்றுகிறது. இவரது தந்தை தேவ் ராஜ் கன்னா, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.
அவரது நெருங்கிய உறவினரான எச்.ஆர்.கன்னா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
டில்லியில், 1960 மே 14ல் பிறந்த சஞ்சீவ் கன்னா, டில்லி பல்கலை சட்ட மையத்தில் சட்டம் பயின்றார். கடந்த 1983ல் டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகபதிவு பெற்றார்.
ஆரம்பத்தில், டில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராக துவங்கினார்.
வருமான வரித்துறை வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றிய அவர், 2004 முதல், டில்லி தேசிய தலைநகர் பிரதேச வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 2019, ஜனவரி முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின், உச்ச நீதிமன்ற அறையில் நீதிபதி சஞ்சய் குமாருடன் இணைந்து வழக்கு விசாரணையை சஞ்சீவ் கன்னா நேற்று துவக்கினார்.
அப்போது, மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி உள்ளிட்ட வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.